குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒளிப்படக் கலைஞரான பானுக துஷ்மந்த தற்போது களனி பல்கலைக்கழகத்தில் ஒளிப்படக் கலை மற்றும் வடிவமைப்புக் கற்று வருகின்றார். ஒவியம், சிற்பக்கலை மற்றும் புகைப்படக்கலை ஆகியவற்றில் தீவிர ஆர்வமுடைய பானுக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற “வர்ணாஞ்சலி” கண்காட்சிக்குக் கலைப்படைப்புக்கள் மூலம் பங்களிப்பு வழங்கியுள்ளதுடன் தற்போது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குக் கூடங்களை வடிவமைக்கும் சுயாதீனக் கலைஞராகச் செயற்படுகின்றார். அக்ரிலிக் மற்றும் எண்ணைய் வண்ணங்களைக் கொண்டு படைப்பாக்கும் இவர் கலப்பு ஊடகத்திலும் பணியாற்றி வருகின்றார்.

எமது கதைகள் முன்னெடுப்புக்காக, வேலைப்பளுமிகுந்த வாழ்க்கை முறைகளினால் தொழில்களுக்காக எவ்வாறு மனித உறவுகள் தியாகம் செய்யப்படுகின்றன என்பதையும் அவை எவ்வாறு மனித வாழ்வின் தரங்களைப் பாதிக்கின்றன என்பதையும் கூறும் வாழ்க்கைக் கதைகளில் பானுக கவனம் குவிக்கின்றார். கதையின் பிரதான பாத்திரமாக வருபவர் வாழ்வில் அதிருப்தியடைகின்றார்.ஏனெனில் அவருக்குப் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கவில்லை. அரவணைப்பும் வழிகாட்டலும் இல்லாத அவருக்குக் கிடைப்பதும் மகிழ்வற்ற திருமண வாழ்க்கையே. மனித உறவுகளைப் புரிந்துகொள்வதும் அன்பு, பொறுப்பு மற்றும் அரவணைப்புப் போன்ற கண்ணுக்குப் புலப்படாத உணர்வுகளைப் புரிந்துகொள்வதும் மானுட வாழ்வின் இன்றியமையாத பண்புகள் என்பதை இவரின் கதை எடுத்துக்காட்டுகின்றது. இவை வெறுமனே பரிமாற்றங்களுக்கு அப்பால் நீட்சியடையும் மானுட சித்தாந்தங்களாகும்.